ஜார்கண்ட்: தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் தலைக்கு 15 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டான்.

Update: 2021-07-15 17:37 GMT
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள குரும்ஹிராப் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவன் புதேஷ்வர் ஒரியன் லல்ஹா மற்றும் அவனது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக இன்று மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

புதேஷ்வர் ஒரியன் மீது இதுவரை 53 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில், 20 கொலை வழக்குகளும் அடக்கம். புதேஷ்வர் ஒரியனின் தலைக்கு ஜார்கண்ட் மாநில அரசு 15 லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில், புதேஷ்வர் ஒரியன் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிப்பதற்காக ஜார்கண்ட் மாநில போலீஸ் படை மற்றும் நக்சலைட்டு ஒழிப்பு படையினர் இணைந்து குரும்ஹராப் காட்டிற்குள் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, காட்டிற்குள் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டு புதேஷ்வர் ஒரியன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். எஞ்சிய நக்சலைட்டுகள் என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள், எல்.இ.டி. டெடனெட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்