மேகதாது திட்ட விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு குமாரசாமி வலியுறுத்தல்

மேகதாது திட்ட விஷயத்தில் அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-21 05:35 GMT
கோப்புப்படம்
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா, தமிழ்நாட்டில் தனது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் தமிழ்நாட்டின் நலனுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அம்மாநிஅல் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று உறுதி அளித்திருப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி என்றால் மேகதாது திட்டத்தில் மத்திய அரசு ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறிய தகவல் பொய்யானதா?. மத்தியிலும்-மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருப்பதால் நடைபெறக்கூடிய பயன்கள் தான் என்ன?.

மேகதாது விஷயத்தில் கர்நாடக பா.ஜனதா அரசு அக்கட்சியின் மேலிடம் கூறுவது போல் நடந்து கொள்கிறது. இந்த திட்டத்திற்கு எதிராக பா.ஜனதா இருக்கிறது. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தீவிரமாக போராடுகிறது. ஆனால் கர்நாடக அரசு எதையும் செய்யாமல் அமைதியாக உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.

ஆயினும் இந்த திட்டத்தை அமல்படுத்த விடாமல் தமிழ்நாடு அரசு தடுக்கிறது. அந்த மாநில அரசு அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?. தமிழ்நாடு அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆனால் கர்நாடக அரசு தற்போது தான் அந்த திட்டத்திற்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாது விஷயத்தில் தனது இஷ்டம் போல் நடந்து கொள்ளும் மனப்பான்மையை எடியூரப்பா விட்டுவிட்டு அனைவரின் கருத்துகளையும் கேட்டு அறிய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் காவிரி நீர் பிரச்சினை வழக்கை போல் மேகதாது பிரச்சினையும் நீண்ட காலத்திற்கு வழக்காகி தேங்கிவிடும்.

கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா, தமிழ்நாட்டில் தனது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் பா.ஜனதா தமிழ்நாட்டின் நலனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியில் கூட்டணியில் உள்ளது. அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி மட்டுமே மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராடுகிறது” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்