தினசரி கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக உயர்வு மராட்டியத்தால் பலியும் அதிகரித்தது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 42 ஆயிரமாக உயர்ந்தது. மராட்டியத்தால் பலியும் அதிகரித்தது.

Update: 2021-07-22 01:58 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 30 ஆயிரத்து 93 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 42 ஆயிரத்து 15 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மராட்டிய மாநிலம் விட்டுப்போன பாதிப்பு கணக்கை (2,479) சரிக்கட்டியதும் இந்த உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும்.

இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக உயர்ந்தது.

நேற்றுமுன்தினம் 18 லட்சத்து 52 ஆயிரத்து 140 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் பாதிப்பு விகிதம் 2.27 சதவீதம் ஆகும். தொடர்ந்து 30-வது நாளாக தினசரி பாதிப்பு விகிதம் 3 சதவீதத்துக்குள் இருக்கிறது. வாராந்திர பாதிப்பு 2.09 சதவீதம் ஆகும்.

5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகளவில் பதிவாகி இருக்கிறது. அந்த மாநிலங்கள் கேரளா (16 ஆயிரத்து 848), மராட்டியம் (9,389), ஆந்திரா (2,498), ஒடிசா (2,085), தமிழ்நாடு ஆகும். நேற்றைய பாதிப்பில் 77.89 சதவீத பாதிப்பு இந்த 5 மாநிலங்களில் அடங்கி உள்ளது.

நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் கொரோனாவால் 374 பேர் மட்டுமே இறந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்தது.

இதற்கு காரணம், மராட்டிய மாநிலத்தில் விடுபட்டுப்போன இறப்புகளை (3,509) கணக்கில்கொண்டு வந்துள்ளனர். இதையும் சேர்த்து மராட்டியத்தில் நேற்றைய பலி கணக்கு 3,656 ஆகும். கேரளாவில் 104 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை, 4 லட்சத்து 18 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், சண்டிகார், தத்ராநகர்ஹவேலி டாமன் டையு, குஜராத், இமாசலபிரதேசம், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கிற அம்சம் ஆகும்.

நேற்று நாடு முழுவதும் 36 ஆயிரத்து 977 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இதுவரையில் இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரத்து 687 ஆகும்.

குணம் அடைவோர் விகிதம் 97.36 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் நேற்று கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1,040 அதிகரித்தது. இதனால் காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 170 ஆக அதிகரித்தது.

இருப்பினும் இது மொத்த பாதிப்பில் 1.30 சதவீதம் மடடுமே ஆகும்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்