ஊடக நிறுவனங்களில் சோதனை நடத்துவது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லையா? தேசியவாத காங்கிரஸ் கேள்வி

ஊடக நிறுவனங்களில் சோதனை நடத்துவது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லையா? என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2021-07-22 20:30 GMT
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறையினர் நேற்று ஊடக நிறுவன உரிமையாளர் தாய்னிக் பாஸ்கர் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்தி செய்தி சேனல் பாரத் சமாச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. ஊடக நிறுவனங்கள் வாி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி இந்த சோதனை போபால், ஜெய்பூர், ஆமதாபாத், நொய்டா உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.இந்தநிலையில் ஊடக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அறிவிக்கப்படாத அவசரநிலை
பெகாசஸ் உளவு அமைப்பு மூலமாக பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு அவர்களை அம்பலப்படுத்தியவர்களை குறிவைக்க தொடங்கி உள்ளது. இதில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாய்னிக் பாஸ்கர். அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தோல்விகள், உண்மைகளை மறைக்க ஊடக நிறுவனங்களின் குரல்கள் நெரிக்கப்படுவதை அச்சமின்றி வெளியிட்டு வந்தார்.தற்போது வருமான வரித்துறையினர் அவரை சோதனை நடத்தி உள்ளனர்.

இதேபோல இந்த சோதனையை வெளியிட்ட பாரத் சமாச்சர், அதன் ஆசிரியர் பிரேசும் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இது அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் இல்லையா?. இது பேச்சுரிமையை கொலை செய்வது அல்லவா?. இது ஜனநாயக படுகொலைக்கான தொடக்கம் இல்லையா?. இந்தியாவுக்கும், பொது மக்களுக்கும் இதற்கான விடை கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்