பூமி கண்காணிப்புக்காக தனியார் செயற்கைக்கோள் - இம்மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்த சிறிய செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.;
ஸ்ரீஹரிகோட்டா,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள், அகமதாபாத்தில் 14 கிலோ எடையுள்ள சிறிய வகையிலான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை தயாரித்து உள்ளது. இதனை பரிசோதித்து ஒருங்கிணைத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு, விண்வெளியில் ஏவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் பிரதான செயற்கைக்கோளுடன், 18 இணை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. அதில் ஒன்று தான் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு வரப்பட்ட செயற்கைக்கோள்.
பூமி கண்காணிப்புக்கான எம்.ஓ.ஐ-1 என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும். இந்த செயற்கைக்கோள் வணிக மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுடைய திட்டமிடப்பட்ட செயல்பாட்டு ஆயுள் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். இதிலுள்ள கேமரா தெளிவுத்திறன் 18.7 கிலோ மீட்டர் நீள்வட்டத்துடன் 9.2 மீட்டர் திறன் கொண்டதாகும். விவசாய கண்காணிப்பு, நகர்ப்புற வரைபடம் தயாரிப்பு, கப்பல் கண்டறிதல், கட்டுமான கண்காணிப்பு போன்ற பணிகளில் இந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.