பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து பதவி ஏற்பு விழாவில் கொரோனா விதிமீறல்; போலீஸ் வழக்கு பதிவு

பஞ்சாப் மாநிலத்தில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்துவுக்கும், மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங்குக்கும் இடையேயான மோதலுக்கு கட்சி மேலிடம் தீர்வு கண்டது. சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது. அமரிந்தர் சிங்கையும் சமாதானப்படுத்தியது.;

Update:2021-07-25 01:53 IST
நேற்று முன்தினம் சண்டிகாரில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகமான பஞ்சாப் காங்கிரஸ் பவனில் நடைபெற்ற விழாவில் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றார். இந்த விழாவில் அமரிந்தர் சிங்கும் கலந்துகொண்டு வாழ்த்தினார். பெருந்திரளாக தொண்டர்களும் குவிந்தனர். இதில் கொரோனா விதி முறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. யாரும் முககவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளி பராமரிக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்து விழாவில் கலந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது சண்டிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 188 (அரசால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக சட்டம் ஆகியவற்றின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்