இந்தியா-ரஷ்யா 13 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி; ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

Update: 2021-07-27 12:08 GMT
புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சியின் 12-வது பதிப்பான ‘இந்திரா-2021’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரஷ்யாவின் வால்கோகிராடில் நடைபெற உள்ளது. 

இந்தப் பயிற்சியில் இரண்டு நாடுகளிலிருந்தும் 250 பேர் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக காலாட்படை பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்துக்கு இடையேயான இயங்கு தன்மை மற்றும் பரஸ்பர தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளுக்கிடையே சிறந்த செயல்முறைகளை பகிர்ந்துகொள்ளவும் ‘இந்திரா-21’ கூட்டு ராணுவ பயிற்சி உதவிகரமாக இருக்கும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்