யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குஜராத்தில் உள்ள தோலவிரா என்ற தொல்பொருள் தளம் 40வது இடம் பிடித்தது.

Update: 2021-07-27 13:40 GMT
புதுடெல்லி, 

உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் மட்டுமல்ல சிந்துசமவெளி நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் இருக்கின்றன. குறிப்பாக சொல்வது எனில் பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மாநிலத்தின் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலவிரா மற்றும் அகமதாபாத் நகர் அருகே உள்ள லோத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தோலாவிராதான்.

தோலவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது. தோலவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக தோலவிரா உள்ளது.  

இந்நிலையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40வது இடத்தை பிடித்துள்ளது. 

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோலவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்தது, இது நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 



மேலும் செய்திகள்