உத்தரபிரதேசத்தில் மாடி பஸ் மீது லாரி மோதியதில் 18 பயணிகள் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து பீகார் மாநிலம் நோக்கி 130 பயணிகளுடன் ஒரு தனியார் மாடி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், நேற்று முன்தினம் இரவு, உத்தரபிரதேச மாநிலம் பாரபரங்கியில் லக்னோ-அயோத்தி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பஸ்சின் அச்சு முறிந்தது.

Update: 2021-07-29 01:08 GMT
இதனால், அந்த பஸ் பழுது பார்ப்பதற்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டது. சற்று நேரத்தில், பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு லாரி அந்த மாடி பஸ்சின் பின்புறமாக மோதியது.இந்த விபத்தின்போது, பஸ் பயணிகள் சிலர், உள்ளே அமர்ந்திருந்தனர். வேறு சிலர் பஸ்சுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். விபத்தில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர். அந்த பஸ்சில் சென்றவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநில விவசாய தொழிலாளர்கள் ஆவர்.

இந்த விபத்து பற்றி அறிந்தவுடன், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்