4 தடவை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன் ஆஜராகாத அனில் தேஷ்முக்

ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அமலாக்கத்துறை 4-வது முறையாக சம்மன் அனுப்பியும் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆஜராவதை தவிர்த்தார்.

Update: 2021-08-03 01:43 GMT
பரம்பீர் சிங் குற்றச்சாட்டு
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா வீட்டு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சச்சின் வாசே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து பரம்வீர் சிங் முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தில், உள்துறை மந்திரி தேஷ்முக் போலீசாரை ஓட்டல் மற்றும் பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.இதுகுறித்த வழக்கை ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரிக்க ஒப்படைத்ததை அடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆஜராகவில்லை
சி.பி.ஐ. விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை மாமூல் வழக்கில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அனில் தேஷ்முக் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால் இந்த முறையும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தனது வக்கீல் மூலம் அமலாக்கத்துறைக்கு 2 பங்க கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இந்த நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கில் தன்மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று(செவ்வாய்க்கிழமை) 
விசாரணைக்கு வர உள்ளது.அனில் தேஷ்முக் கடந்த மாதம் தனது மனு மீதான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு அமலாக்கத்துறை முன் ஆஜராவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலாளர் சஞ்சிவ் பாலண்டே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோர் அமலாக்கதுறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்