நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன - மோடி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Update: 2021-08-03 20:20 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்தை மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் காகிதங்களை கிழித்தெறிவது, மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறவிதம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறுவது, நாடாளுமன்றத்தையும், அரசியல் சாசனத்தையும் அவமதிப்பதாகும்.

தங்கள் நடத்தைக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருந்தவில்லை. இது அவர்களது ஆணவத்தைக் காட்டுகிறது.

மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிற விதம் குறித்துகடுமையான கருத்துக்களை வெளியிடுவது நாடாளுமன்ற நடைமுறைக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மதிப்புக்கும் இழுக்கு ஆகும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகத்துக்கு ஒவ்வாத அணுகுமுறையை கொண்டுள்ளனர். அவர்கள் அர்த்தம் உள்ள விவாதங்களில் பங்குகொள்ளவில்லை. மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த தடையையும் அனுமதிக்க முடியாது. மசோதாக்கள் அரசுக்கு உரியவை அல்ல. அவை மக்கள் நலனை இலக்காக கொண்டவை.

ஆக்கப்பூர்வமான, வளமான விவாதங்களை அரசு விரும்புகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்