‘ஜன் ஆசிர்வாத் யாத்திரை'யின் போது பழங்குடியின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த மத்திய மந்திரி பாரதி பவார்

பால்கரில் 'ஜன் ஆசிர்வாத் யாத்திரை'யின் போது மத்திய மந்திரி பாரதி பவாா் பழங்குடியின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

Update: 2021-08-18 01:19 GMT
மந்திரி நடனம்
புதிதாக பதவி ஏற்ற மத்திய மந்திரிகள் மக்களை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ‘ஜன் ஆசிர்வாத் யாத்திரை' (மக்கள் ஆசி யாத்திரை) என்ற பெயரில் அவர்கள் மக்களை சந்திக்கிறார்கள்.இந்த நிலையில் பால்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பவார் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். இதில் அவர் மனோர் பகுதிக்குள் நுழைந்த போது, பழங்குடியின மக்கள் அவர்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மந்திரியை வரவேற்றனர். அப்போது மந்திரியும் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய தார்பா நடனத்தை ஆடினார். அவர் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் பழங்குடியின மக்களுடன் வட்டமிட்டு நடனமாடி அசத்தினார். இதேபோல பழங்குடியின மக்கள் கைதட்டியபடியே அவர்களின் பாடலை பாடினர். அதையும் மந்திரி கேட்டு ரசித்தார்.

தானே, பீட்
மந்திரியுடன் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேகர், பா.ஜனதா எம்.எல்.ஏ. மனிஷா சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல புதிதாக மத்திய மந்திரி சபையில் இணைந்த கபில் பாட்டீல் தானேயிலும், பாகவத் காரட்பீட் பகுதியிலும் ஆசிர்வாத் ஜன் யாத்திரையை நடத்தினர்.

மத்திய கேபினட் மந்திரி நாராயண் ரானே வருகிற 19-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் வசாய் விராரில் நடைபெற உள்ள யாத்திரிரையில் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்