கடன் சுமையால் பள்ளி தாளாளர், மனைவி தற்கொலை

ஆந்திராவில் கடன் சுமையால் பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-19 00:07 GMT
கர்னூல்,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம்(33) மற்றும அவரது மனைவி ரோஷ்னி (27). இந்த தம்பதியர் கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், ரோஷ்னி அதேபள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர். 

இதற்கிடையில், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரமணியம் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால், கொரோனா காரணமாக பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் சேர்க்கை தடைபட்டது. மேலும், கொரோனா காலம் என்பதால் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதிலும் சிக்கல் நிலவி வந்துள்ளது. 

இதனால், வாங்கிய கடனை திரும்பி செலுத்துவதிலும், கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் கடந்த சில மாதங்களாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுப்ரமணியம் - ரோஷ்னி தம்பதி மிகுந்த நிதிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடுமையான கடன் சுமையால் மிகுந்த கவலையில் இருந்த சுப்ரமணியம் - ரோஷ்னி தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விஷ மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன்னதாக இருவரும் வீடியோ ஒன்றை எடுத்து அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தற்கொலை செய்துகொண்ட தம்பதியின் உடலை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் சுமையால் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியையான அவரது மனைவி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்