பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் - நிர்மலா சீதாராமன்

பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2021-08-22 00:19 GMT
லக்னோ,

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்காக, ‘மிஷன் சக்தி’ என்ற திட்டத்தை உத்தரபிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் 3-ம் கட்ட திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் நிகழ்ச்சி நடந்தது. 75 பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது அவள் வெட்கத்தால் ஒதுங்குவது இல்லை. அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால், சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள். அதுதான் பெண்களின் தனிச்சிறப்பு.

பெண்களுக்காக மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்துகிறது. அதே உணர்வுடன் உத்தரபிரதேச அரசும் அவற்றை அமல்படுத்துகிறது.

நான் ராணுவ மந்திரியாக இருந்தபோது, லக்னோவில் ராணுவ பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்கும் நடைமுறை தொடங்கப்பட்டது. பிறகு, தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படைகளில் நேரடியாக பெண்களை அதிகாரிகளாக நியமிக்கும் நடைமுறை வந்து விட்டது.

சமீபத்திய மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தில், நிறைய பெண் மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 11 பெண் மந்திரிகள் உள்ளோம்.

கிராமங்களில் சேமிப்பு கிடங்கு வசதிகளை உருவாக்க மத்திய அரசு பணம் கொடுக்கிறது. இதை பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளை அமைக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்