மும்பையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 47 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 47 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-09-02 20:37 GMT
மும்பை,

மும்பையில் கடந்த மாதம் 16-ந் தேதி 190 பேருக்கு மட்டும் கொரோனா கண்டறியப்பட்டது. இது 2020-ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பாகும். அதேபோல கொரோனா இரட்டிப்பாகும் நாட்களும் 2 ஆயிரமாக உயர்ந்தது. மேலும் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்தது.

ஆனால் அங்கு கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பையில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 4 பேர் உயிரிழந்தனர். நேற்றும் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 3 பேர் தொற்று நோயின் காரணமாக உயிரிழந்தனர். 

இதன்மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சியில் 5 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 47 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் நெரிசல் உள்ள குடிசை மற்றும் சால்களில் கடந்த மாதம் இடைப்பட்ட நாட்களில் இருந்து புதிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லை” என்றார்.

மேலும் செய்திகள்