அடுத்தவர் தோளில் ஏறி அரசியல் செய்பவர் ராகுல்காந்தி: பா.ஜனதா

மற்ற பறவைகளின் கூடுகளை பயன்படுத்தும் ‘குக்கூ’ பறவை போல், தனது அரசியல் நலனுக்காக, அடுத்தவர் தோளில் ஏறி சவாரி செய்பவர் ராகுல்காந்தி என்று பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2021-09-06 18:22 GMT
பழைய புகைப்படம்

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லை. கள பிரச்சினைகளை எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. அதனால்தான், அதன் இடைக்கால தலைவரான சோனியாகாந்தி, மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ராகுல்காந்தியோ, முசாபர்நகரில் நடந்த விவசாயிகள் மாநாடு பற்றி குறிப்பிடுவதற்காக, பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தையும், பொய்யையும் பரப்பி வருகிறார்.

இந்திய அரசியல் குக்கூ
‘குக்கூ’ என்ற பறவை, சொந்தமாக கூடு கட்டாது. மற்ற பறவைகளின் கூடுகளை பயன்படுத்திக்கொள்ளும். ராகுல்காந்தியும் அப்படித்தான் செயல்படுகிறார். அவர் தனது சொந்த கட்சிக்காக வேலை செய்வது இல்லை. களத்தில் இறங்கி கடுமையாக பாடுபடுவது இல்லை. தனது அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவர்களின் தோள்களில் ஏறி சவாரி செய்து வருகிறார். அதனால் அவர் ‘இந்திய அரசியலின் அரசியல் குக்கூ’ என்று அழைக்கப்படுகிறார்.

மோடி முதலிடம்
விவசாயிகளுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். விவசாயிகள் நலனுக்காக மோடி அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை ஒன்றரை லட்சம் கோடி ரூபாய், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. விளைபொருள் கொள்முதலில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாக கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய அரசின் சாதனைகளாலும், ஏழைகளுக்கான நலத்திட்டங்களாலும் இது சாத்தியமாகி இருக்கிறது.

ராகுல்காந்தி மவுனம்
கொரோனா தடுப்பூசி பணி வேகம் எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 68 கோடியே 75 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், தடுப்பூசி பணி குறித்து ராகுல்காந்தி இப்போது டுவிட்டரில் கருத்து கூறுவது இல்லை. தனது அரசியல் லாபத்துக்காக குழப்பத்தை உருவாக்கும் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சிறுமி கற்பழிக்கப்பட்டது பற்றியோ, சத்தீஷ்காரில் முதல்-மந்திரியின் தந்தை சர்ச்சை பற்றியோ எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்