சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற உலக வங்கி ரூ.1,112 கோடி கடன்

சென்னை மாநகரை உலகத்தரம் வாய்ந்த நகரம் ஆக்குவதற்கு தமிழ்நாட்டுக்கு உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் வழங்குகிறது.

Update: 2021-10-01 21:55 GMT
புதுடெல்லி, 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தில் 1 கோடியே 9 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நகரம் என்ற பெயரை சென்னை பெற்றுள்ளது. சென்னை பொருளாதார மையமாக திகழ்ந்து வந்தபோதிலும், வளர்ந்து வரும் முக்கிய சேவைகளை சந்திக்கக்கூடிய அளவுக்கு இல்லை.

கடலோர நகரமான சென்னை, இப்போது இயற்கை பேரழிவுகள், பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா அவசர நிலை வெளிப்படுத்தியபடி தொற்று நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரமாக உள்ளது.ன்

இந்த நிலையில், சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்காக தமிழ்நாட்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,112 கோடி) கடன் வழங்குவதற்கு உலக வங்கி முடிவு செய்துள்ளது.

இதற்கான முடிவை உலக வங்கியின் செயல் இயக்குனர்கள் எடுத்துள்ளனர்.

இந்த கடன் உதவியைக் கொண்டு சென்னை மாநகரம், பசுமையான, வாழ்வதற்கு உகந்த, போட்டித்தன்மை கொண்ட, பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகாத நகரமாக மாறும்.

இந்த நிதியைக் கொண்டு நிறுவனங்கள் வலுப்படுத்தப்படும், சேவை அமைப்புகளின் நிதி நிலைமை மேம்படுத்தப்படும், குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை ஆகிய 4 சேவைகள் மேம்படுத்தப்படும்.

சென்னை மாநகரத்தையும் அதன் சேவைகளையும் மாற்றுதவதற்கான முயற்சிகளில் தமிழக அரசுக்கு இந்த திட்டம் ஆதரவாக அமையும், சென்னையை குறைந்த அளவு கார்பன் உமிழ்வு நகரமாகவும் மாற்றும். சென்னை பெருநகர மாநகராட்சிக்கும் இந்த கடன் திட்டம் உதவும்.

இந்த தகவல்கள் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்