சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் தகராறு - ஒருவர் குத்திக்கொலை

சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-02 21:51 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பையின் கிழக்கு வடலா நகரில் உள்ள கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அருகே பஹ்லா கார்டன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் முகமது ரஃபிக் அன்சாரி (41) தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது,  அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த இடம் அருகே வந்த முகமது அப்துல்லா அலாம் ஷேக் (24) அங்கு சிறுநீர் கழிக்க முயற்சித்துள்ளார். அப்போது, நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருப்பதால் வேறு இடம் சென்று சிறுநீர் கழிக்குமாறு முகமதுவிடம் அன்சாரி கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அன்சாரியை சரமாரியாக குத்தினார். 

இந்த கத்திக்குத்து தாக்குதலில் நிலைகுலைந்த அன்சாரி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அன்சாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்சாரியை கத்தியால் குத்திக்கொலை செய்த முகமதுவை கைது செய்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக அன்சாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

மேலும் செய்திகள்