ஜப்பான் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து

ஜப்பான் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-04 09:53 GMT
புதுடெல்லி,

ஜப்பானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஷின்ஜோ அபே தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகியதை தொடர்ந்து, அவரது வலது கரமாக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார். ஜப்பானை பொறுத்தவரையில் ஆளும்கட்சியின் தலைவராக இருப்பவரே அந்த நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.‌

இந்த சூழலில் செப்டம்பர் 29-ந்தேதி நடைபெறும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். இதன் மூலம் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தனது முடிவை அறிவித்தார்.

இந்தநிலையில் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் ஜப்பானின் முன்னாள் வெளியுறவு மந்திரியான புமியோ கிஷிடாவும், யோஷிஹைட் சுகாவின் மந்திரி சபையில் கொரோனா தடுப்பூசி மந்திரியாக பதவி வகித்து வரும் டாரோ கோனோவும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேர்வாகினர். அதில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் புமியோ கிஷிடா வெற்றிப்பெற்று கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புமியோ கிஷிடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வாகினார். 

இந்நிலையில், ஜப்பான் புதிய பிரதமரான கிஷிதா ஃபுமியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்