திருப்பரங்குன்றம் விவகாரம்: மத்திய மந்திரியின் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
பொறுப்பற்ற முறையிலும், பண்பற்ற தன்மையிலும் மத்திய மந்திரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரைக்கு வந்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், ''திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுப்போர் முட்டாள்கள்'' என்று சற்றும் பொறுப்பற்ற முறையிலும், பண்பற்ற தன்மையிலும் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே மதக் கலவரத்தைத் தூண்டி, வரவிருக்கும் தேர்தலில் 'வாக்கு வங்கி'யாக அதனை மாற்றிவிடலாம் என்று கனவு காண்பவர்களுக்கு பதில் சொல்வதற்கு ஒரு சாதாரண பகுத்தறிவுக் குடிமகனே போதும்.
வழக்கமாக நடைபெற்றுவரும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தடை செய்ததா, தமிழ்நாடு அரசு?. பக்தர்கள் வசதிக்காக – வழிபாட்டிற்காக, கோவில் சம்பிரதாயப்படி ''தீபம்'' ஏற்றவேண்டிய நாளில், முறையாக அங்கே ஏற்றிவிட்ட நிகழ்ச்சிக்கு ஏதாவது தடை – இடையூறு ஏற்பட்டதா? அதற்கு அரசால் ஏதாவது தடை விதிக்கப்பட்டதா?.
நாவடக்கமின்றிப் பேசும் இப்படிப்பட்ட ஆணவப் பேச்சுக்கு, நீங்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும் என்பதை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் புரிய வைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.