வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் எப்போது..? வெளியான முக்கிய தகவல்

வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான ஒருபகுதி மெட்ரோ ரெயில் சேவையை விரைவாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2026-01-02 00:02 IST

சென்னை,

திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை (நீலவழித்தடம்), சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (பச்சை வழித்தடம்) என 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மாதவரம் –சிறுசேரி சிப்காட் (ஊதா வழித்தடம்), பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலான (ஆரஞ்சு லைன்), மாதவரம் –சோழிங்கநல்லூர் (சிகப்பு வழித்தடம்) ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

இதில் ஆரஞ்சு லைன் வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான ஒருபகுதி மெட்ரோ ரெயில் சேவையை விரைவாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆற்காடு ரோட்டை ஒட்டி செல்கிறது. இந்த வழித்தடத்தில் ஜனவரி மாதத்தின் மத்தியில், அதாவது வருகிற 15-ந்தேதி வாக்கில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். இதையொட்டி இரவு, பகலாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயர்மட்ட ஸ்லாப்கள் அமைக்கும் பணியில் 3 ஆயிரம் பேர், தண்டவாளம் அமைக்கும் பணியில் 600 பேர், சிக்னலிங் பணியில் 400 பேர் உடன் பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 7 குழுக்களாக பிரிந்து வேலை செய்து வருகின்றனர். இந்த மெட்ரோ வழித்தடத்தில் 57 கிரேன்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடமானது 'டபுள் டெக்கர்'வடிவில் செயல்படுத்தப்பட உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையின் 'முதல் டபுள் டெக்கர் மெட்ரோ ரூட்'என்ற பெருமையை பெறும்.

எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்..?

இந்த வழித்தடத்தில் எந்த ஒரு ரெயில் நிலையப் பணிகளும் இன்னும் முழுமை பெறவில்லை. வருகிற ஜூன் மாதம் ரெயில் நிலையங்கள் தயாராகி விடும். அதன்பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். முன்னதாக பூந்தமல்லி –போரூர் இடையில் ரெயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கடந்த டிசம்பர் மாதமே திட்டமிட்டப்பட்டது.

ஆனால் ரெயில்வே வடிவமைப்பு மற்றும் தர அமைப்பிடம் இருந்து வேகச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தொடக்க விழா தள்ளி போய்விட்டது. தற்போது சான்றிதழ் கிடைத்துவிட்டது. ஆனால் பணிகளில் இன்னும் ஒரு சதவீதம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்