உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி என பிரியங்கா அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் வாக்காளர்களைக் கவர காங்கிரஸ் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-10-23 17:23 GMT
வாக்குறுதி யாத்திரை

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிக்கனி பறிக்க காங்கிரஸ் கட்சி அதிரடி உத்திகளை வகுத்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியை அங்கு முகாமிட்டு, களப்பணி ஆற்ற வைத்துள்ளது. அவரும் களம் இறங்கி வாக்காளர்களைக் கவரும் விதத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இப்படி 7 அறிவிப்புகளை வெளியிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க கட்சியினரை பிரதிக்யா யாத்திரை (வாக்குறுதி யாத்திரை) மேற்கொள்ள வைத்துள்ளார்.

பரபாங்கி, வாரணாசி, சகாரன்பூர் ஆகிய இடங்களில் இருந்து 3 யாத்திரை, 10 நாளில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்று, மக்களை சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையை, தலைநகர் லக்னோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பரபாங்கியில், பிரியங்கா காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதிரடி சலுகைகள்

அப்போது அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி 7 வாக்குறுதிகளை அளிக்கிறோம். அவை, தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் டிக்கெட் கொடுப்போம். விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்வோம். இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைகள் வழங்குவோம். நெல், கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,500 அளிப்போம் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்துவோம். கொரோனா பாதித்த எழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி கொடுப்போம். மின்கட்டணத்தை பாதியாக குறைப்போம். பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவோம் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுப்போம். சட்டசபை தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் தருவதாகவும், பட்டதாரி பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதாக அறிவித்து இருப்பதும் தேர்தல் வித்தை அல்ல. இது பெண்களை இன்னும் வலிமையாக்கும். அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழி இது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ரூ.72 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தோம். இது அவர்களுக்கு பெரிதும் உதவியது.

20 லட்சம் வேலைகளை வழங்குவோம். அரசு துறைகளில் நிறைய இளைஞர்களை சந்தித்தேன். அவர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்களை பணி நிரந்தரம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களிடம் கலந்துரையாடல்

லக்னோவில் இருந்து பரபாங்கி வரும் வழியில், ஹராக் என்ற கிராமத்தில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன், பிரியங்கா காந்தி வயல்வெளியில் உட்கார்ந்து கலந்துரையாடினார். அவர்களுடன் 30 நிமிடம் செலவழித்தார். அது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்