காஷ்மீர்: பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி - மனித உரிமை ஆர்வலர் கைது

காஷ்மீரில் பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி செய்த வழக்கில் மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-23 01:54 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, பல்வேறு பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரில் பிரபல மனித உரிமை ஆர்வலரான குராம் பர்வேஷ் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. நலத்திட்டப்பணிகள் செய்வதற்காக என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டி அதை காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை ஊக்கப்படுத்த பயன்படுத்தியதாக பர்வேஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூக கூட்டணி அமைப்பு மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூக கூட்டணி அமைப்பின் அலுவலகம், குராம் பர்வேஷின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையின் போது பர்வேஷிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூக கூட்டணி அமைப்பின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. மேலும், குராம் பர்வேஷிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத சதித்திட்டம், பயங்கரவாத செயலுக்கு ஆட்களை திரட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பர்வேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்