கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ராகுல்காந்தி வலியுறுத்தல்

கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-11-24 22:14 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பா.ஜனதா ஆட்சி நடக்கும் குஜராத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி பேசியுள்ளனர்.

இந்த வீடியோவுடன் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

‘குஜராத் மாடல்’ என்று பெருமையாக பேசப்படுகிறது. ஆனால், கொரோனா காலத்தில் குஜராத் மாடலின் உண்மைத்தன்மை அம்பலமாகி விட்டது.

குஜராத் மாநிலத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம்பேர் பலியாகி உள்ளனர். இதை உறுதிப்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர். ஆனால், வெறும் 10 ஆயிரம் பேர் பலியானதாக மாநில அரசு கணக்கு காட்டுகிறது. அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா மரணங்கள் குறித்து நம்பகமான புள்ளிவிவரங்கள் வெளியிட வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்