மராட்டியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பஸ் ஊழியர்கள் இடைநீக்கம்

மராட்டியத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 3 ஆயிரத்து 10 பஸ் ஊழியர்கள் இடைநீக்கம் செய்ய்பட்டனர். இதுவரை 18 ஆயிரம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.

Update: 2021-11-27 20:19 GMT
மந்திரி எச்சரிக்கை

மராட்டியத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் மாநில சாலை போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி எஸ்.டி. பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை ஐகோர்ட்டு கண்டித்த போதும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து மந்திரி அனில் பரப் பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார்.

இதேபோல நேற்று முன்தினம் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் மந்திரி கேட்டு கொண்டார். மேலும் உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு சம்பள வெட்டு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இடைநீக்கம்

போக்குவரத்து துறை மந்திரியின் எச்சரிக்கையை மீறி நேற்றும் பஸ் ஊழியர்கள் 31-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதி அடைந்தனர்.

மாநில போக்குவரத்து கழகம் இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 215 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உள்ளது. மேலும் 1,226 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 ஆயிரத்து 10 ஊழியர்கள் இடைநீக்கம் செய்ய்பட்டனர்.

பணிக்கு திரும்பியவர்கள்

அதே நேரத்தில் மந்திரியின் எச்சரிக்கையை அடுத்து 92 ஆயிரத்து 266 போக்குவரத்து கழக ஊழியர்களில் நேற்று வரை 18 ஆயிரத்து 90 பேர் பணிக்கு திரும்பினர். பணிக்கு வந்தவர்களில் 2 ஆயிரத்து 130 பேர் டிரைவர்கள். 2 ஆயிரத்து 112 பேர் கண்டக்டர்கள் ஆவர். மற்றவர்கள் நிர்வாக மற்றும் பணிமனை ஊழியர்கள். ராய்காட் மாவட்டம் மன்காவ் உள்ளிட்ட சில பகுதிகளில் டெப்போவை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர். இதேபோல சாங்கிலி, கோலாப்பூர் மண்டலங்களில் உள்ள சில டெப்போக்களிலும் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன.

410 பஸ்கள் இயக்கம்

நேற்று மதியம் 2 மணி வரை மாநில போக்குவரத்து கழகம் சார்பில் 410 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 313 சாதாரண பஸ்கள் ஆகும்.

மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு மேல் பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடருவது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு உடனடியாக பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்