டெல்லி: அச்சுறுத்தும் காற்று மாசு; பொதுமக்கள் கடும் அவதி!

டெல்லியில், காற்று மாசு பிரச்சினை தொடர்ந்து மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது.

Update: 2021-12-06 03:53 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 311 ஆக பதிவாகி இருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.நாளை இதைவிட மோசமான நிலை, காற்று தரக் குறியீடு 321 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காற்று தரக் குறியீடு, டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 301 ஆகவும் நொய்டாவில் 342 ஆகவும் பதிவாகி உள்ளது.

காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். 

அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது. 

100க்குள் இருக்க வேண்டிய காற்று தரக் குறியீடு அளவு,  தொடர்ந்து 300க்கும் மேல் பதிவாகி வருவதால் தலைநகரில் வசித்து வரும் மக்கள், பொதுமுடக்கம் அமலில் இருப்பது போல வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காற்றுமாசு காரணமாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் சந்தித்து வரும் அவதியை வார்த்தைகளால் சொல்லி மாளாது. 

வாகன பெருக்கம், டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

காற்று மாசு காரணமாக கடந்த மாதம் 13-ந் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், கடந்த 29-ந் தேதிதான் மீண்டும் செயல்பட தொடங்கின. இந்தநிலையில், காற்று மாசு அதிகரித்ததால், டெல்லியில் அனைத்து பள்ளிகளும்  மீண்டும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்தது. எனினும், நேரடி வகுப்புகளுக்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்