எல்லையில் பிறந்த குழந்தைக்கு 'பார்டர்’ என பெயர் வைத்த தம்பதி...!

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

Update: 2021-12-06 09:26 GMT
அட்டாரி,

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம் ராம். இவர் மனைவி நிம்பு பாய். இந்த தம்பதியினர்  உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். 

புனித தலங்களுக்கு சென்றுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்து திரும்பினர்.ஆனால், இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். 

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்கள், அங்குள்ள கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான மூன்று வேளை உணவு, உடை உள்ளிட்டவற்றை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவி வருகின்றனர்.

கர்பமாக இருந்த  பலம் ராமின் மனைவி நிம்பு பாயுக்கு கடந்த 2 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அட்டாரி எல்லைப் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். நிம்பு பாயிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை பார்டரில் பிறந்ததால் ’பார்டர்’ என்றே குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளனர்.

பலம் ராம் தவிர, பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  பலர் அதே கூடாரத்தில் தங்கியுள்ளனர். இதில் லக்யா ராமுக்கு என்பவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ’பாரத்’ என்று பெயர் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்