தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரின் நீதிமன்ற காவலை ரத்து செய்தது ஐகோர்ட்டு!

பண்டி சஞ்சய் குமாருக்கு விதிக்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் தீர்ப்பை ரத்து செய்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது ஐகோர்ட்டு.

Update: 2022-01-06 04:05 GMT
ஐதராபாத்,

கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் தெலுங்கான மாநில பாஜக தலைவருமான பண்டி சஞ்சய் குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தெலுங்கானாவில் அரசு வேலை பெறுவதற்கும், வேலை மாற்றம் செய்வதற்கும் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மண்டல அளவிலான முறையினை கண்டித்து ‘ஜாகரானா’ என்ற பெயரில் இரவில் போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் குமார் மீது மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ள, பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கரீம்நகர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த அவசர மனுவை விசாரித்த நீதிபதி, தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி உஜ்ஜல் பூயான் கூறியிருப்பதாவது, “ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இன்றியமையாதது, போராட்டம் நடத்தும் சட்டமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்கும் அளவுக்கு ஒரு மாநிலம் செல்லக்கூடாது. 

தனிப்பட்ட உத்தரவாதத்துடன் அவரை சிறையில் இருந்து விடுவிக்கவும். அவர் நாடாளுமன்ற உறுப்பினர். எனவே எந்த உத்தரவாதமும் தேவையில்லை” என்று கூறினார்.

மேலும் கரிம்நகர் கோர்ட்டின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் தீர்ப்பை ரத்து செய்தும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நேற்று தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஜாமீனில் வெளிவந்தார்.

மேலும் செய்திகள்