புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு

புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்த்தப்பட உள்ளது.

Update: 2022-01-13 12:42 GMT
புதுச்சேரி,

புதுவையில்  2022-23ம் ஆண்டுக்கான மின்கட்டணத்தை உயர்த்த மின்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோகத்துக்கான மின்சாரம் உயர்த்தப்படுகிறது.

அதாவது 100 யூனிட் வரை வீடுகளுக்கான மின்சார கட்டணம் இதுவரை யூனிட்டுக்கு ரூ.1.55 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த கட்டணம் இனிமேல் ரூ.1.90 ஆக வசூலிக்கப்பட உள்ளது. அதாவது யூனிட்டுக்கு 35 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேபோல் உயர் மின் அழுத்த தொழிலகங்களுக்கான மின்கட்டணம், அரசு தண்ணீர் தொட்டிகளுக்கான மின்கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் முந்தைய கால பற்றாக்குறையை வசூலிக்க தற்போது அனைத்து நுகர்வோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் ஒழுங்குமுறை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் 5 சதவீத தொகை, வருகிற நிதியாண்டிலும் அனைத்து நுகர்வோர்களுக்கும் தொடர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்