6-வது கட்ட தேர்தல்-58 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

நாடாளுமன்றத்துக்கு நாளை (சனிக்கிழமை) 6-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இதில் மேனகா காந்தி, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள்.

Update: 2024-05-24 14:33 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. அதாவது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 428 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதமும், 2-ம் கட்டத்தில் 66.71 சதவீதமும், 3-ம் கட்டத்தில் 65.68 சதவீதமும், 4-ம் கட்டத்தில் 69.17 சதவீதமும், 5-ம் கட்டத்தில் 62.02 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் 6-ம் கட்டமாக உத்தரபிரதேசம், அரியானா, பீகார், டெல்லி, மேற்குவங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 58 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேசம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், குருசேத்ரா தொகுதியில் போட்டியிடும் பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள்.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும்பணியும் உடனடியாக தொடங்கியது. பதற்றமான, மிகவும் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

நாளை நடைபெறும் 6-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கான 42 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்