திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து
சட்ட போராட்டத்திற்கு பிறகும் தீபம் ஏற்ற முடியவில்லை என ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
கார்த்திகை தீப சமயத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாகத் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்தக் கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோவிலுக்குப் பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அதில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், நேற்றைய தினம் இந்தச் சம்பவத்தில் பல திருப்பங்கள் நடந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களின் வழக்கமாகிவிட்டது. இந்துக்கள் தங்களது நம்பிக்கையை பின்பற்ற நீதிமன்றத்தை நாட வேண்டிய வருத்தமான நிலை தீர்க்கமான சட்டப் போராட்டத்திற்கு பிறகும் தீபமேற்றும் சடங்கை சொந்த நாட்டில் செய்ய முடியவில்லை. சாதி, பிராந்தியம், மொழியால் பிளவுபட்டுள்ளவரை இந்துக்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் இருக்கும் ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.