ஜேப்படி வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது

பெங்களூருவில் ஜேப்படி வழக்கில் கைதான 8 பேரும் தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Update: 2023-07-26 18:45 GMT

சம்பங்கிராம் நகர்:-

பயணிகளிடம் ஜேப்படி

பெங்களூருவில் திருட்டு, வழப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாக நடந்து வருபவர்களை குறிவைத்து வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இந்த நிலையில் குடும்பமாக சேர்ந்து ஜேப்படியில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு சம்பங்கிராம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பஸ் நிலையங்களில் பயணிகளின் பொருட்கள், பணப்பை, செல்போன்கள் மர்மநபர்கள் ஜேப்படி செய்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து பெங்களூரு சம்பங்கிராம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

அப்போது கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் ஜேப்படியில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலு, சுந்தர்ராஜ், மகேஷ், கன்யகுமார் உள்பட 8 பேர் என்பதும், தமிழகத்தை சேர்ந்த அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

மேலும், தந்தை, சகோதரர், சிறுவர்கள் என 8 பேரும் பயணிகளிடம் கைவரிசை காட்டுவதை முழுநேர தொழிலாக வைத்திருந்ததும், அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. கைதான 8 பேரும் பெங்களூரு பனசங்கரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, ஆளுக்கு ஒரு பஸ் நிலையம் என்ற ரீதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் சென்று ஜேப்படியில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

25 வழக்குகள்

குறிப்பாக கூட்டம் அதிகம் இருக்கும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் இருந்து பணப்பை, சங்கிலி, செல்பேன் ஆகியவற்றை கைவரிசை காட்டி வந்து உள்ளனர். அவர்கள் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தற்போது அவர்கள் கைதானதன் மூலம் அந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைத்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக 8 பேர் மீதும் சம்பங்கிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பமாக சேர்ந்து ஜேப்படியை செய்தவர்கள் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்