உத்தர பிரதேசத்தில் தனக்காக விரதம் இருந்த மனைவியை குத்தி கொலை செய்ய முயன்ற கணவன்...

தனக்காக விரதம் இருந்த மனைவியை கணவனே கொலை செய்ய முயன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.;

Update:2022-10-15 15:11 IST

லக்னோ,

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் 'கர்வா சவுத்' என்ற பண்டிகை பண்டிகையின் போது, திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி விரதம் இருந்து கடவுளை வழிபடுகின்றனர்.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகர் பகுதியில், மோனி குப்தா என்ற பெண் தனது கணவன் மனோஜ் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி 'கர்வா சவுத்' விரதத்தை மேற்கொண்டுள்ளார். அதே சமயம் இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், மனோஜ் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 'கர்வா சவுத்' பண்டிகையின் போது வீட்டிற்கு வந்த மனோஜ், தனது மனைவி மோனி குப்தாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மோனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள், மனோஜ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து மோனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனக்காக விரதம் இருந்த மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மனோஜை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்