808 பண்பலை வானொலி நிலையங்களுக்கு விரைவில் மின்னணு ஏலம் - அனுராக் தாக்கூர் தகவல்
விரைவில் 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்கள் நடத்த மின்னணு ஏலம் விடப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
டெல்லியில், பிராந்திய சமுதாய வானொலி மாநாடு நடந்தது. அதில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
நாட்டில் தற்போது 26 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள 113 நகரங்களில் மொத்தம் 388 பண்பலை வானொலி நிலையங்கள் உள்ளன. நாடு முழுவதும் வானொலி சேவையை விரிவுபடுத்துவதற்காக, விரைவில் 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்கள் நடத்த மின்னணு ஏலம் விடப்படும்.
மேலும், வானொலி நிலையங்கள் நடத்த, குறிப்பாக சமுதாய வானொலி நிலையங்கள் நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்தி இருக்கிறது. அதற்கான நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் பேசினார்.