பெங்களூரு மாநகராட்சி அலுவலக தீவிபத்தில் படுகாயம்: தலைமை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி சாவு

பெங்களூரு மாநகராட்சி அலுவலக தீவிபத்தில் பலத்த காயம் அடைந்திருந்த தலைமை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-30 21:40 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஆய்வக அறையில் கடந்த 11-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாநகராட்சியின் தலைமை என்ஜினீயர் சிவக்குமார் உள்பட 9 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை அழிக்க திட்டமிட்டு தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தலைமை என்ஜினீயர் சிவக்குமாரிம் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனை மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் மறுத்திருந்தார். இந்த நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் நேற்று பரிதபாமாக உயிரிழந்தார்.

அவருக்கு 25 சதவீத தீக்காயம் தான் ஏற்பட்டு இருந்தாலும், அந்த காயம் சரியாகாமலும் மூச்சு விட சிரமப்பட்டதாலும் சிவக்குமார் உயிரிழந்ததாக தெரிகிறது. தலைமை என்ஜினீயர் சிவக்குமாரின் உடல் இன்று(வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்