சிக்கமகளூருவில் 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்க கலெக்டர் உத்தரவு

சிக்கமகளூருவில் 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மீனா நாகராஜ் கூறினார்.

Update: 2023-09-22 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மீனா நாகராஜ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி்ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மீனா நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அம்தே உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் மீனா நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை 21 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அதாவது பொதுமக்கள் விண்ணப்பித்த 21 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள நகரசபை, கிராம பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அலைக்கழிக்க கூடாது

இந்த பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது. மேலும் மனு அளிக்க வரும் ெபாதுமக்களை அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது. பொதுமக்களின் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் எதற்காக தேவைப்படுகிறது என மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால், அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனுடைய அவசியம் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாங்கவில்லை என்றால் கோர்ட்டு மூலம் தான் வாங்க முடியும் என்பதை பொதுமக்களிடம் கூற வேண்டும்.

இறப்பு சான்றிதழ்

அப்படி பொதுமக்கள் கோர்ட்டுக்கு சென்றால் உடனே பிறப்பு, இறப்பு சான்றிதழ் கிடைக்காது. அவர்கள் விண்ணப்பித்த நாட்களில் இருந்து 6 மாதங்கள் வரை கோர்ட்டுக்கு அலைந்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். மேலும் அதிக பணமும் செலவாகும். இதனால் அலைச்சல் தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்