மூடநம்பிக்கையால் உயிரிழந்த பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு

மூடநம்பிக்கையால் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-02 21:22 GMT

துமகூரு:-

மூடநம்பிக்கையால்...

துமகூரு மாவட்டம் கொல்லர்ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தது. குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. எனினும் அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து சில நாட்கள் கழித்து உயிருடன் இருந்த பெண் குழந்தையுடன் வசந்தா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர்களது கிராமத்தில், பிரசவமான பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கிராமத்திற்குள் நுழைய கூடாது என்பது மூடநம்பிக்கையாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையடுத்து கிராமத்தின் புறநகர் பகுதியில் குடிசை அமைத்து வசந்தா மற்றும் அவரது பச்சிளம் பெண் குழந்தை வசித்து வந்தனர். அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உடல் தோண்டி எடுப்பு

இதையடுத்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே இதுகுறித்து அறிந்த மாவட்ட நீதிபதி குழு நேரில் வந்து குடிசைப்பகுதியை ஆய்வு செய்தனர். மேலும் கிராமத்தினருக்கு அறிவுரை கூறினர். மூடநம்பிக்கையால் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புறநகர் போலீசார் வசந்தாவின் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை துணை மண்டல அதிகாரி கவுரவ் குமார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். பின்னர் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே, குழந்தை சாவில் உள்ள மர்மம் விலகும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்