ரஷிய அதிபர் புதின் விருந்தில் பங்கேற்பு; சசிதரூருக்கு காங்கிரஸ் கண்டனம்
புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள, காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.;
புதுடெல்லி,
ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். புதின் வருகையின் போது வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதற்கிடையே, புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் திரௌபதி முர்மு வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள, பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு தலைவரான காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று அவர் விருந்தில் பங்கேற்றார். அவர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோருடன் மகிழ்ச்சியுடன் உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் ராகுல் காந்திக்கும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விருந்தில் பங்கேற்ற சசிதரூர், பிரதமர் மோடி மற்றும் ரஷியா அதிபர் புதின் இடையிலான நட்புறவைப் பாராட்டினார். அவர் கூறியதாவது: “வெளியுறவுக் கொள்கையில் பாரம்பரிய சின்னங்களும் செயல்திறனும் மிகவும் முக்கியமானவை. இரு நாடுகள் இடையேயான உறவில் இது ஒரு முக்கிய அறிகுறி என்பதைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வெளிவிவகாரத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக நான் ஆற்றிய பணிகளே விருந்தில் பங்கேற்க காரணமாகும்" என்றார்.
இந்த நிலையில், சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும், அதில் அவர் பங்கேற்றதற்கும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: “எதிர்க்கட்சித் தலைமைக்கு அழைப்பு விடுக்காத நிலையில், எனக்கு மட்டும் அழைப்பு விடுப்பது ஏன்? இதில் ஏதேனும் அரசியல் விளையாட்டு நடக்கிறதா? அதில் நான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று அவர் (சசிதரூர்) கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யாமல் அழைப்பை ஏற்றது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார். சசிதரூருக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது: “காங்கிரஸ் தலைமை ஏன் இதைக் கண்டிக்கிறது என்று புரியவில்லை. வெளிநாட்டு கொள்கையில் பலரும் பங்களித்துள்ளனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்” என்றார்.சசிதரூர் கடந்த 1 ஆண்டுக்கு மேலாகவே மோடியையும், பாஜகையையும் பாராட்டி வருகிறார். ஆனால் இதுவரை அவர் மீது காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.