ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-05 15:26 GMT

புவனேஷ்வர்,

ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. அங்குள்ள பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது. நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

1,175 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. முக்கியமாக அரசு மற்றும் ரெயில்வேத்துறைக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை கண்டுபிடித்து எதிர்காலத்தில் இது போன்ற கோரங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம்உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். அதேபோல், விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153,154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்