பிளிகிரி ரங்கணபெட்டா வனப்பகுதியில் காட்டுத்தீ

பிளிகிரி ரங்கணபெட்டா வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதால் 100 ஏக்கர் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின.

Update: 2023-03-09 06:45 GMT

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பிளிகிரி ரங்கணபெட்டா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பிளிகிரி ரங்கநாதசாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வனத்துறையினருக்கு சொந்தமான கட்டிடம் அருகே இருந்து இந்த காட்டுத்தீ பரவியது. இதைப்பார்த்த வனத்துறையினர், உடனடியாக தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். மேலும் அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் காட்டுத்தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த தீவிபத்தில் சுமார் 100 ஏக்கர் அளவில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின. மேலும் சிறு, சிறு விலங்குகள் மற்றும் உயிரினங்களும் தீயில் கருகி செத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக பிளிகிரி ரங்கணபெட்டா மலைப்பகுதிக்கும், அங்குள்ள கோவிலுக்கும் மக்கள் யாரும் வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்