உத்தர பிரதேசத்தில் பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் தீவிர விசாரணை
இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ள பாரா ஹாவேலி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் மிஸ்ரா(வயது 55). இவர் 75 வயதான தனது தாய் மாலா தேவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவர்களின் வீடு இன்று உள்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. வீட்டை விட்டு இருவரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜய் மிஸ்ராவும், அவரது தாயாரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிரிழப்பதற்கு முன்பு வாந்தி எடுத்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.