ஜனார்த்தன ரெட்டிக்கு அனுமதி இல்லை

பல்லாரிக்குள் நுழைய ஜனார்த்தன ரெட்டிக்கு அனுமதி இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-04-20 00:15 IST

பெங்களூரு, 

கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி. இவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் பல்லாரி மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பா.ஜனதாவில் இருந்து விலகிய ஜனார்த்தன ரெட்டி கர்நாடக கல்யாண ராஜ்ய பிரக்தி கட்சியை தொடங்கினார். இந்த தேர்தலில் அவர் கொப்பல் மாவட்டம் கங்காவதியிலும், அவரது மனைவி அருணா பல்லாரி நகர தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். மேலும் அவரது கட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தனது மனைவி பல்லாரி நகர தொகுதியில் போட்டியிடுவதால், அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு வசதியாக பல்லாரிக்குள் நுழைய வழங்கிய அனுமதியை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று எம்.ஆர்.ஷா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் மீனாட்சி அரோரா, ஜனார்த்தன ரெட்டி தனக்கு பேத்தி பிறந்திருப்பதால் பல்லாரிக்கு செல்ல அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டு நிபந்தனைகளை தளர்த்தி அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது அவர் மீண்டும் பல்லாரி செல்ல அனுமதி கேட்கிறார். அவருக்கு அனுமதி வழங்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த பல்லாரிக்கு செல்ல வழங்கிய அனுமதியை நீட்டிக்க மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜனார்த்தன ரெட்டி வக்கீல் அந்த மனுவை வாபஸ் பெற்றார். இதனால் பல்லாரி நகர தொகுதியில் தனது மனைவி மற்றும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்