காற்று மாசு; டெல்லி ஏற்ற இடமில்லை... உலகின் 3-ம் நிலை வீரர் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகல்

டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட்டும், டெல்லியில் போட்டி நடைபெறும் ஆடுகளம் தகுதியற்று இருக்கிறது என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.;

Update:2026-01-14 14:53 IST

புதுடெல்லி,

டெல்லியில் குளிர் காலத்தில் காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளிலும் காற்று தர குறியீடு மிக மோசம் என்ற அளவில் இருந்து வருகிறது. ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் காற்று தர குறியீடு நேற்று 337 ஆக பதிவாகியுள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை கூட 3 டிகிரி என்ற அளவில் பதிவாகி மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில், காற்று மாசுபாட்டால் டெல்லி, பேட்மிண்டன் போட்டி விளையாடுவதற்கான ஏற்ற இடமில்லை என கூறி இந்தியா ஓபன் 2026 பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து, உலக தர வரிசையில் 3-ம் இடம் வகிக்கும் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் விலகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு விதிகளின்படி, முதல் 15 இடங்களில் உள்ள வீரர்கள் கட்டாயம் போட்டிகளில் விளையாட வேண்டும். இல்லையென்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், உடல்நிலையே முக்கியம் என கூறி போட்டியில் இருந்து விலகிய டென்மார்க் வீரரான ஆன்டன்சன், தனக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தொடர்ந்து 3-வது முறையாக இதுபோன்று இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதற்கு முன், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட்டும், போட்டி நடைபெறும் ஆடுகளம் தகுதியற்று இருக்கிறது. அழுக்கு படிந்து காணப்படுகிறது என நேற்று கூறினார்.

இதுபோன்ற பெரிய போட்டிகளை நடத்தும்போது, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கூறி அவர் சர்ச்சை ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்