ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.;
புதுடெல்லி,
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அநாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 2,572 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாடு முழுவதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஈரானில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே போராடும் மக்கள் மீது அரசாங்க படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் மக்கள் தொடர்பில் இருக்கவும், பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.