ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Update: 2022-08-02 12:27 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜார்கண்ட் சட்டசபை சபாநாயகர் ரவீந்திரநாத் மகாதோ, பாஜகவை சேர்ந்த பானுபிரதாப் சாஹி, துலு மாதோ, ஜெய்பிரகாஷ் பாய் படேல் மற்றும் ரந்தீர் சிங் ஆகிய நால்வரையும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்துள்ளார். அவர்கள் அனைவரும் கண்ணியம் தவறிய முறையில் சட்டசபையில் அநாகரிமாக நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன், பாஜக எம்எல்ஏக்கள், ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரென் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர் மற்றும் ஊழல் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதி காக்கும்படியும் அவரவர் இருக்கையில் உட்காரும்படியும் சபாநாயகர் வலியுறுத்தினார். அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற்பகல் வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது போல ஜார்க்கண்ட்டில், எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்