சுவாதி மாலிவால் விவகாரம்: கெஜ்ரிவால் உதவியாளருக்கு காவல் நீட்டிப்பு

கெஜ்ரிவாலின் உதவியாளரை 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-24 12:23 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையில் சுவாதி மாலிவால் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கையில், சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த பிபவ் குமாரின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிபவ் குமாரை 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கவுரவ் கோயல், பிபவ் குமாரை மே 28ம் தேதி வரை (அதாவது 4 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்