பதவியேற்பு விழாவை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் மோடி மரியாதை
பதவியேற்பு விழாவை முன்னிட்டு தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.;
Image Courtesy : @narendramodi
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், தன்னலமற்ற சேவையும், அவர்கள் போராடிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்காக நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் அவர்கள் கனவு கண்ட வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கிட அவர்களின் தியாகம் நம்மை ஊக்குவிக்கிறது."
இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.