ஆபத்தான முறையில் மரப்பாலத்தை கடக்கும் மக்கள்; நிரந்தர பாலம் அமைக்க அரசிடம் கோரிக்கை

சுள்ளியா அருகே ஆபத்தான முறையில் மரப்பாலத்தை மக்கள் கடந்து வருகின்றனர். அங்கு நிரந்தர பாலம் அமைக்க அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-10 14:54 GMT

மங்களூரு;

தீவு கிராமம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பாலுகோடு அருகே ஹரிஹர பல்லட்கா கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் உப்கலா கிராமம் அமைந்துள்ளது. குமாரதாரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 11 வீடுகள் உள்ளன. அங்கு 49 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் குமாரதாரா ஆற்றின் அருகே ஒரு தீவு போல அமைந்துள்ளது.

இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அன்றாட தேவைகளுக்கும், வேலைக்கும் குமாரதாரா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக அந்தப்பகுதி மக்கள் அங்கு 25 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்தில் மரப்பாலம் ஒன்றை அமைத்துள்ளனர். அந்த பாலத்தின் வழியே தினமும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு பாலுகோடு கிராமத்துக்கு வந்து செல்கிறார்கள்.

ஆபத்தான முறையில்...

இந்த நிலையில் தற்போது அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் மக்கள் ஆபத்தான முறையில் அந்த பாலத்தை கடந்து வருகிறார்கள். ஆற்றில் தண்ணீர் அதிகளவு வந்தால் அந்த பாலத்தை அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.

இதனால் குமாரதாரா ஆற்றின் குறுக்கே ஒரு நிரந்தர பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், நாங்கள் தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் மரப்பாலத்தை கடந்து வருகிறோம்.

ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் மரப்பாலத்தை பயன்படுத்தி வருகிறோம். இதனால் அரசு அங்கு நிரந்தரமாக ஒரு பாலத்தை அமைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்