எக்காரணம் கொண்டும் ராகுல் காந்தியின் குரலை அடக்க முடியாது- டி.கே.சிவக்குமார் பேட்டி

எக்காரணம் கொண்டும் ராகுல் காந்தியின் குரலை அடக்க முடியாது என்று கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துளார்.

Update: 2023-08-04 13:31 GMT

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பெயரை அவமதித்த வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் ராகுல் காந்தியின் குரலை அடக்க முடியாது. நாடு, மக்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி எழுப்பும் குரலை பாதுகாக்கும் விதத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அமைந்துள்ளது.

கோர்ட்டு தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் எப்படி அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தார்களோ அதே போல் 24 மணி நேரத்திற்குள் அவருக்கு எம்.பி. பதவியை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சபாநாயகர் சிக்கலில் சிக்குவார். நீதி வழங்கும் பீடத்தில் இருந்து அநீதி ஏற்படாது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஜனநாயகத்தில் வெறுப்புக்கு இடம் இல்லை என்பதை இந்த உத்தரவு கூறியுள்ளது.

ராகுல் காந்தி விவகாரத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எந்த ரீதியில் தகுதி நீக்கம் செய்தனர் என்பதை நாட்டு மக்களும், உலகமும் நன்றாக கவனித்துள்ளது. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்