சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு..!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

Update: 2023-08-09 05:15 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன. பட்டு வஸ்திரம் சுற்றப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இந்த நெற்கதிர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்படுகிறது. பின்பு விரதமிருந்து வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றன. அவற்றை பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து நாளை காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படுகின்றன. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பின்பு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்